செய்திகள்

விஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி சொத்து பறிமுதல்

Published On 2016-11-11 17:21 GMT   |   Update On 2016-11-11 17:22 GMT
விஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி சொத்து பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
மும்பை:

பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். தற்போது லண்டனில் தலைமறைவாக இருந்து வரும் அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அவர் மீது அமலாக்கத்துறை வழக்கப்பதிவு செய்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டது. பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நாடு திரும்பவில்லை.

இந்நிலையில் மும்பை ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.900 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக மும்பையில் பண மோசடி தடுப்பு சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. கைது வாரண்டு பிறப்பித்தும், பாஸ்போர்ட்டை முடக்கியும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் மும்பை சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள விஜய் மல்லையாவின் அசையும் சொத்துகளை (பங்குகள்) பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். ஆனால் வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க கோர்ட்டு மறுத்து விட்டது. கோர்ட்டு உத்தரவுபடி விஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளை கிரிமினல் நடைமுறை சட்டத்தின்படி அமலாக்கத்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தது.

மேலும் கோர்ட்டு உத்தரவை இந்த வழக்கில் தொடர்புடைய பங்குதாரர்களுக்கும் அனுப்ப அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னதாக விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கில், அவருக்கு சொந்தமான ரூ.8,041 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்திருந்தது. 

Similar News