செய்திகள்

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரிக்கை

Published On 2016-11-07 20:20 GMT   |   Update On 2016-11-07 20:20 GMT
இந்தியா தேடி வரும் தொழில் அதிபர் விஜய் மல்லையா உள்பட 60 பேரை நாடு கடத்தி தரும்படி இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரை வழக்கு விசாரணைக்காக நாடு கடத்தும்படி இந்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தது. ஆனால் அதை இங்கிலாந்து ஏற்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடி, இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயுடன் நடத்திய இரு நாடுகள் உறவு தொடர்பான பேச்சுவார்த்தையின்போது விசாரணைக்காக இந்தியா தேடி வரும் தொழில் அதிபர் விஜய் மல்லையா உள்பட 60 பேரை நாடு கடத்தி தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த பட்டியலில் இங்கிலாந்தின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு நடத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலும் இடம் பெற்று இருக்கிறார். இதேபோல் இங்கிலாந்தும் 17 பேர் கொண்ட பட்டியலை இந்தியாவிடம் அளித்தது.

இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது, தப்பியோடிய குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாதவாறு நிலுவையில் உள்ள நாடு கடத்தல் கோரிக்கை குறித்த பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Similar News