செய்திகள்

காஷ்மீரில் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி

Published On 2016-10-27 18:02 GMT   |   Update On 2016-10-27 18:02 GMT
அமைதியின்மை நீடித்து வரும் காஷ்மீரில் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சகத்திடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு உள்ளார் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி:

அமைதியின்மை நீடித்து வரும் காஷ்மீரில் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சகத்திடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு உள்ளார் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் போராட்டம், வன்முறைகள் நீடித்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை 85-ஐ தாண்டியது. மத்திய, மாநில அரசுக்கள் நடவடிக்கையினால் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு உத்தரவின் கீழே காஷ்மீர் இருந்து வருகிறது. கல்வி நிலையங்கள் 100- நாட்களுக்கு மேலாக திறக்கப்படவில்லை. இதனால் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உள்ள பிரதமர் மோடி, காஷ்மீரில் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டு உள்ளார்.

பள்ளிகளுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காஷ்மீர் போலீஸை மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

நீண்ட நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பள்ளி படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கவலை அடைந்து உள்ள பிரதமர் மோடி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று நினைக்கிறார். காஷ்மீரில் மீண்டும் இயல்புநிலையை திரும்ப செய்ய இது சிறப்பான நடவடிக்கையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி எண்ணிஉள்ளார் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.  பிரதமர் மோடி காஷ்மீரில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டு உள்ளார் என நம்பப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

காஷ்மீரில் பள்ளிகளுக்கு பாதுகாப்பை வழங்க குறிப்பாக பாதிப்புக்கு இலக்காகிஉள்ள பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்க ஜம்மு காஷ்மீர் போலீசிடம் மத்திய உள்துறை அமைச்சகமும் கேட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது. மாநிலத்தில் பள்ளித் தேர்வுகளை நடத்த பள்ளி கல்வி வாரியத்திற்கு உத்தரவிட ஜம்மு காஷ்மீர் அரசிடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மை ஏற்பட்டு உள்ள நிலையில் பள்ளிகள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டு உள்ளது. இதுவரையில் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் என 20 பள்ளிகள் காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவத்தினால் மத்திய அரசு கவலைக் கொண்டு உள்ளது. இதற்கிடையே இந்திய பாதுகாப்பு படையின் மதிப்பீடு, பயங்கரவாத குழுக்கள் கிராம புறங்களில் உள்ள குழந்தைகளை ஜமாத் பள்ளிகள் மற்றும் மதர்ஸாக்களில் சேர்க்க முயற்சிக்கிறது என்பதாக உள்ளது. நவீன கல்வி முறையை தேர்வு செய்ய முடியாமை இளைஞர்களை மேலும் எளிதாக தீவிரமயமாக்கமுடியும் என்றும் குறிப்பிட்டு உள்ளது என்று தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன.

Similar News