செய்திகள்

அமர் சிங் இல்லையென்றால் நான் சிறைக்கு சென்றிருப்பேன்: முலாயம் சிங்

Published On 2016-10-24 12:41 GMT   |   Update On 2016-10-24 12:41 GMT
அமர் சிங் தனக்கு நிறைய உதவிகள் செய்திருப்பதாகவும், அவர் இல்லை என்றால் சிறைக்கு சென்றிருப்பேன் என்று முலாயம் சிங் தெரிவித்தார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மாநில அமைச்சரவையில் முலாயம் சிங்கின் சகோதரர் சிவபால் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்.

உத்தரப்பிரதேசம் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவான சிவபாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது முலாயம் சிங் சமரசம் செய்து வைக்கிறார்.

இந்த மோதலின் உச்சகட்டமாக அமைச்சரவையில் இருந்து சிவபால் யாதவ், நரட் ராய். ஷதாப் பாத்திமா மற்றும் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது கட்சிக்குள் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைத்து சமாதானப்படுத்த லக்னோ நகரில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் தலைமையில் அவரது வீட்டில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வந்த அகிலேஷ் யாதவ் மற்றும் சிவபால் யாதவ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.

அதன்பின்னர் நடைபெற்ற ஆலோசனையின்போது, அமர் சிங் மற்றும் சிவபாலுக்கு ஆதரவாக முலாயம் சிங் யாதவ் பேசினார். அவர் பேசுகையில், “அமர்சிங் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். அமர் சிங்கை கட்சியில் இருந்து நீக்க முடியாது. அவர் தனது சகோதரர் போன்றவர். அவர் இல்லையென்றால் நான் சிறைக்கு சென்றிருப்பேன்.  சில மந்திரிகள் முகஸ்துதி பாடுகின்றனர். சிவபால் யாதவ் ஆற்றிய பணிகளையும் என்னால் மறந்துவிட முடியாது” என்றார்.

அதனைத் தொடர்ந்து முலாயம், அகிலேஷ் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.  அகிலேஷ் யாதவ், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும், தனது நம்பிக்கைக்கு உரிய நபரை கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் அந்த பதவியில் நியமித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

‘கட்சிக்குள் இருந்து விமர்சனம் செய்வோரின் கருத்துக்கள் சரியாக இருந்தால் அது முன்னேற்றத்தின் நோக்கம் என்று கூறலாம். பெரிதாக சிந்திக்க முடியாதவர்கள் தலைவர்களாக ஆக முடியாது. நான் இன்னும் பலவீனமாகவில்லை. கட்சியை யாராலும் உடைக்க முடியாது’ என்றும் முலாயம் கூறினார்.

இதுபோன்ற வார்த்தை மோதல்களால் இன்றைய ஆலோசனைக் கூட்டம் கருத்து வேறுபாட்டுடனேயே நிறைவடைந்தது.

Similar News