செய்திகள்

கோவளத்தில் திருமண ஆசைகாட்டி வெளிமாநில பெண்களிடம் நகை-பணம் பறிப்பு: உல்லாச விடுதி உரிமையாளர் கைது

Published On 2016-10-24 12:39 GMT   |   Update On 2016-10-24 12:39 GMT
கோவளத்தில் திருமண ஆசைகாட்டி வெளிமாநில பெண்களிடம் நகை-பணம் பறித்த உல்லாச விடுதி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு ஏராளமான வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

இங்கு உள்ள கடலில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் சூரிய குளியல் செய்தும் புத்துணர்ச்சி அடைகிறார்கள்.

இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடற்கரை பகுதியில் பல உல்லாச விடுதிகள் கட்டப்பட்டு உள்ளது. இதுபோன்ற உல்லாச விடுதியை நடத்தி வருபவர் கோவளம் பகுதியை சேர்ந்த விவேக் (வயது 27).

இவர் தனது உல்லாச விடுதியில் தங்கும் வெளி மாநில பெண்களிடம் திருமண ஆசை காட்டி பழகுவார். அதன்பிறகு அவர்களிடம் நகை, பணத்தை பறித்துக்கொண்டு அவர்களை ஏமாற்றி விடுவார்.

இவரிடம் வெளி மாநிலங்களை சேர்ந்த 4 பெண்கள் இதுபோல ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் பணம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் இவர் மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் இவரை போனில் தொடர்பு கொண்டபோது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. கோவளத்திற்கு அவரை சந்திக்க நேரில் வந்தபோதும் அவர் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட 4 பெண்களும் கோவளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது விழிஞ்சத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் விவேக் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் இதுபோல வேறு பெண்கள் யாரையும் ஏமாற்றி உள்ளாரா? பாலியல் ரீதியாக பெண்கள் யாரும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News