செய்திகள்

போதைப்பொருள் விற்ற தயாரிப்பாளர்-டைரக்டர் கைது

Published On 2016-10-24 06:49 GMT   |   Update On 2016-10-24 09:16 GMT
சினிமா படம் பாதியில் நின்றதால் போதைப்பொருள் விற்ற தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரை போலீசார் கைது செய்தனர்.
நகரி:

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் வெங்கடசுரேஷ்பாபு. வைர வியாபாரம் செய்து வந் தார். இவருக்கு சினிமா படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து ஐதராபாத்துக்கு சென்ற அவர் தெலுங்கு படம் ஒன்றை தயாரித்தார். இதற்காக ரூ. 60 லட்சம் செலவிட்டார். அதுவரை பாதி படம் வரை மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு சுரேஷ்பாபுவிடம் பணம் இல்லாததால் படம் பாதியில் நின்றது.

இந்த நிலையில் பிரபல டைரக்டரிடம் உதவி டைரக்டராக இருந்த தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் டைரக்டர் ஆகும் ஆசையில் ஐதராபாத் சென்றார்.

அப்போது சுரேஷ்பாபுவுக்கும், கிஷோருக்கும் நட்பு ஏற்பட்டது. சுரேஷ்பாபுவின் படம் பாதியில் நிற்பதை அறிந்த கிஷோர் அந்த படத்தை தான் தொடர்ந்து டைரக்‌ஷன் செய்து தருவதாக கூறினார்.

படத்தை முடிக்க பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்த போது போதைப் பொருள் விற்கலாம் என்று இருவரும் முடிவு செய்தனர். போதைப்பொருள் விற்றால் நிறைய பணம் கிடைக்கும். அதன் மூலம் படத்தை எளிதாக முடித்து விடலாம் என்று திட்டமிட்டனர். அதன்படி போதைப்பொருள் விற்பனையில் இறங்கினர்.

இந்த நிலையில் நெல்லூர் ரெயில் நிலையம் அருகில் வசிக்கும் ஸ்ரீஹரி ரெட்டி என்பவருக்கு சுரேஷ்பாபு 1½ கிலோ போதைப்பொருளை விற்றார்.

இதை அறிந்த போலீசார் சுரேஷ் பாபுவையும், ஸ்ரீஹரி ரெட்டியையும் கைது செய்தனர். சுரேஷ்பாபுவிடம் இருந்து 1½ கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் தெலுங்கானா மாநிலம் துண்டிகல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவருக்கு கிஷோர் 1.3 கிலோ போதைப்பொருளை விற்க முயன்றார்.

அப்போது கிஷோரை போலீசார் கைது செய்து போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 6 கோடி ஆகும்.

Similar News