செய்திகள்

முலாயம் சிங்குக்கு சர்ச்சைக்குரிய கடிதம் எழுதிய அகிலேஷ் யாதவ் ஆதரவாளர் நீக்கம்

Published On 2016-10-22 19:09 GMT   |   Update On 2016-10-22 19:09 GMT
முலாயம் சிங்குக்கு சர்ச்சைக்குரிய கடிதம் எழுதிய அகிலேஷ் யாதவ் ஆதரவாளர் உதய்வீர் சிங்கை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி வைத்து நேற்று அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் உட்பூசல் நாளுக்கு, நாள் வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் பள்ளித்தோழரும், ஆதரவாளரும், எம்.எல்.சி.யுமான உதய்வீர் சிங், கட்சி தலைவர் முலாயம் சிங்குக்கு 4 பக்க கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர் முலாயம் சிங்கின் 2-வது மனைவி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்தார். மேலும், “சிவபால் யாதவும் (முலாயம் சிங் தம்பி), குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உங்களை தவறாக வழிநடத்துகிறார்கள். முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கு எதிராக சதி செய்கிறார்கள். அவரை கட்சியின் தலைவராக்கி, எல்லா அதிகாரங்களும் தரப்பட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.

இது கட்சி மேலிடத்தில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து உதய்வீர் சிங்கை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி வைத்து நேற்று அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுத்து, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து உதய்வீர் சிங்கிடம் கேட்டபோது, “நீக்கம் தொடர்பான கடிதம் எனக்கு வந்தபின்னரே கருத்து சொல்ல முடியும்” என கூறினார். 

Similar News