செய்திகள்

வி.எஸ்.அச்சுதானந்தன் மகன் மீதான ஊழல் வழக்கில் ஆதாரம் இல்லை: கேரள லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல்

Published On 2016-10-21 06:34 GMT   |   Update On 2016-10-21 06:34 GMT
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு வழக்கில் வி.எஸ்.அச்சுதானந்தன் மகன் மீதான ஊழல் வழக்கில் ஆதாரம் இல்லை என கேரள லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன்.

முன்னாள் முதல்-மந்திரியான இவர் தற்போது கேரள மாநில நிர்வாகம் மற்றும் சீர்திருத்த துறையின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் வி.ஏ.அருண் குமார். இவர் அச்சுதானந்தன், முதல்-மந்திரியாக பதவி வகித்த போது அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்தது.

இது பற்றி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அருண்குமார் போலி சான்றிதழ்கள் மூலம் முனைவர் பட்டம் வாங்கியதாகவும், மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த கமி‌ஷன் கேட்டதாகவும், அவர் பணியாற்றிய துறையில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் புகார்கள் கிளம்பியது.

இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் அருண் குமார் மீது தொடரப்பட்டது.

அருண் குமார் மீதான வழக்குகளை துரிதப்படுத்த கடந்த காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருந்தும் இந்த வழக்கு விசாரணை முடிவடையாத நிலையில் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு பதவிக்கு வந்தது.

இந்த நிலையில் அருண் குமார் மீதான ஊழல் புகாரை விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் அந்த வழக்கில் அருண் குமார் மீதான புகார்களுக்கு முகாந்திரம் இல்லை என்று தெரிவித்து உள்ளது. இதனால் அச்சுதானந்தன் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News