செய்திகள்

பிரசவ விடுப்பு எடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மேனகா காந்தி நடவடிக்கையால் மீண்டும் வேலை

Published On 2016-10-21 05:41 GMT   |   Update On 2016-10-21 05:41 GMT
பிரசவ விடுப்பு எடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மேனகா காந்தி நடவடிக்கையால் மீண்டும் வேலை கிடைத்தது.
புதுடெல்லி:

டெல்லியை அடுத்த நெய்டாவில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஷில்பா. இவர் பிரசவ கால விடுப்பு எடுத்தார்.

அதன்பிறகு பணியில் சேர வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீண்ட காலம் விடுப்பு எடுத்ததால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

உடனே அவர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்திக்கு புகார் மனு அனுப்பினார். அவர் அந்த புகாரை தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கடந்த 12-ம் தேதி இதுதொடர்பான விசாரணை நடைபெற்றது. பணிநீக்கம் செய்யப்பட்ட  ஷில்பா மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள தேசிய மகளிர் ஆணையம் அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும் பிரசவ கால சலுகைகளுடன் அவருக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை மேனகா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 12 வாரங்கள் பிரசவகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. மேல்சபையில் மழைகால கூட்டத் தொடரில் நிறைவேறிய இந்த சட்டம், மக்களவையில் வருகிற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது.

Similar News