செய்திகள்

தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட 12 அரசு ஊழியர்கள் நீக்கம்

Published On 2016-10-20 08:27 GMT   |   Update On 2016-10-20 08:27 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக 12 அரசு ஊழியர்கள் அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:

தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் 100 நாட்களுக்கும் மேலாக அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் அரசு ஊழியர்கள் சிலர் இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டுவதாகவும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக கண்காணித்து அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய கோப்புகளை தயாரித்து அரசுக்கு அனுப்பியது. அதில் 36 அரசு ஊழியர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

இந்த கோப்புகளை ஆய்வு செய்த அரசு, 12 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்கள் வருவாய், பொது சுகாதார பொறியியல், ஊரக வளர்ச்சி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு சட்டத்தின் 126-வது பிரிவின்படி இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் ஜாமீனில் வந்துள்ளனர். சிலர் கைது நடவடிக்கையை தவிர்த்து வருகின்றனர்’ என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இதேபோல் கடந்த 1990ம் ஆண்டு தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக கல்வி அமைச்சர் உள்ளிட்ட 5 அரசு ஊழியர்கள் நீக்கப்பட்டனர். பின்னர் ஊழியர்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News