செய்திகள்

ஒடிசாவில் 21 நோயாளிகள் பலி: ஆஸ்பத்திரி தலைவர் கைது

Published On 2016-10-20 07:04 GMT   |   Update On 2016-10-20 07:05 GMT
ஒடிசாவில் 21 நோயாளிகள் பலியான தீ விபத்து தொடர்பாக ஆஸ்பத்திரி தலைவர் கைது செய்யப்பட்டார்.
புவனேஸ்வர்:

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு 21 நோயாளிகள் பலியானார்கள். மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

தீப்பிடித்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் உயிர் காக்கும் கருவிகள் செயல் இழந்து நோயாளிகள் பலர் உயிர் இழக்க நேரிட்டது.

இந்த தீவிபத்து தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணைக்கு முதல்-மந்திரி நவீன்பட்நாயக் உத்தர விட்டார். போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்டமாக ஆஸ்பத்திரி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா புவனேஸ்வர் வந்து தீ விபத்து நடந்த ஆஸ்பத்திரியை பார்வையிட்டார். 21 நோயாளிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஆஸ்பத்திரி தலைவர் மனோஜ் ரஞ்சன் நாயக் மீதும் வழக்கு பதிவு செய்து அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். மேலும் நாயக்கும் அவரது மனைவியும் வெளிநாட்டுக்கு தப்பி விடாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மனோஜ் நாயக் நேற்று இரவு புவனேஸ்வரில் உள்ள காந்தகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆஸ்பத்திரி ஒரு டிரஸ்ட் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தலைவராக மனோஜ் ரஞ்சன் நாயக் செயல்பட்டு வந்தார். இந்த டிரஸ்ட்டில் நடைபெறும் பணப்பரிமாற்றம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகிகள் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News