செய்திகள்

மின்தடை பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல்: பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்

Published On 2016-10-20 04:34 GMT   |   Update On 2016-10-20 04:34 GMT
கேரளாவில் 25-ந்தேதி முதல் மின்தடை பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் திட்டத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் அடிக்கடி மின்சார தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.

மின்தடையை நிவர்த்தி செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின் உற்பத்தியை அதிகரிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மாநிலத்தில் திடீர், திடீரென மின்சாரம் தடை படுவதால் பொது மக்கள் மட்டுமின்றி தொழிலாளர்களும் அவதிக்கு ஆளானார்கள்.

திருவனந்தபுரத்திலும் அறிவிப்பின்றி மின்சாரம் தடைபடுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு தீர்வு காண மின்வாரிய அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் பயனாக இனி திருவனந்தபுரத்தில் மின்சார தடை ஏற்படும் நேரங்களை வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்க மாநில மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் திருவனந்தபுரத்தில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. முதல்- மந்திரி பினராயி விஜயன், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இதனை தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் மூலம் எப்போதெல்லாம் மின்சாரம் தடைபடும் என்பது எஸ்.எம்.எஸ். மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் மின்கட்டண விவரங்கள், அதை செலுத்தவேண்டிய இறுதிநாள் மற்றும் இறுதி நாளுக்கு முன் நினைவூட்டும் எஸ்.எம்.எஸ்.சும் அனுப்பப்படும்.

இதனை மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News