செய்திகள்

மாட்டிறைச்சி விவகாரம்: மார்க்கண்டேய கட்ஜூவுக்கு அலகாபாத் கோர்ட்டு நோட்டீசு

Published On 2016-10-19 23:36 GMT   |   Update On 2016-10-19 23:36 GMT
மாட்டிறைச்சி விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு மார்க்கண்டேய கட்ஜூவுக்கு அலகாபாத் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
அலகாபாத்:

உத்தரபிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இக்லாக் என்பவர் கடந்த ஆண்டு அடித்து கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பல்வேறு கருத்துகளை வெளியிட்டார். குறிப்பாக பசுவை புனிதமான விலங்கு பட்டியலில் இருந்து நீக்கவும், பல மாநிலங்களில் அமலில் இருக்கும் பசுவதை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகேஷ்நாத் பாண்டே என்ற வக்கீல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் கூடுதல் செசன்சு கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்துக்களின் மத உணர்வுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை கூறியதன் மூலம், பெரும்பாலான மக்களை கட்ஜூ புண்படுத்தி விட்டதாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுச்சி ஸ்ரீவத்சவா, இது குறித்து அடுத்த மாதம் (நவம்பர்) 18-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு மார்க்கண்டேய கட்ஜூவுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். 

Similar News