செய்திகள்

16 வயது மகனை பிச்சை எடுக்கவிட்ட பெண் அரசு ஊழியர் மீது குழந்தைகள் நல அமைப்பு நடவடிக்கை

Published On 2016-10-19 06:23 GMT   |   Update On 2016-10-19 06:23 GMT
மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றிவரும் ஒருபெண் தனது 16 வயது மகனை பிச்சை எடுக்கவிட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள லோதி காலனி பகுதியை சேர்ந்தவர் மாலினி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற மாலினி, டெல்லியில் உள்ள மத்திய நிதியமைச்சக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

விவாகரத்தின்போது தனது ஒரே மகன் மகேஷை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வளர்க்கும் உரிமையை கோர்ட் மூலம் பெற்ற இவர், பின்னர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்தின் மூலம் இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.

இந்நிலையில், நுரையீரல் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த மாலினியின் இரண்டாவது கணவர் கடந்த 2012-ம் ஆண்டு காலமானார்.

மாலினியிடம் வளர்ந்துவந்த மகேஷுக்கு தற்போது 16 வயதாகும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது தாயாரால் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட அந்த சிறுவன், டெல்லியில் உள்ள பூங்காக்களில் தூங்கி, பிச்சை எடுத்து பிழைத்து வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, அந்தச் சிறுவனை மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்த்துள்ள குழந்தைகள் நல அமைப்பினர், வசதிகள் இருந்தும் பெற்றமகனை பிச்சை எடுக்கவிட்ட குற்றத்துக்காக மாலினி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த மாலினி, நான் சம்பாதித்து சாப்பாடு போடாமல் போயிருந்தால் அவன் இவ்வளவு பெரியவனாக வளர்ந்திருப்பானா? என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும், மகேஷ்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அவர் சுமத்தியுள்ளார்.

மிகவும் புத்திசாலியான அவன், தனது அறிவை அழிவுக்கான பாதையை நோக்கி பயன்படுத்த தொடங்கி விட்டான். பள்ளியில் வகுப்புகளை ‘கட்’ அடித்துவிட்டு, மாணவர்களிடம் வம்பு சண்டை இழுப்பது, ஊர் சுற்றுவது போன்றவற்றில் அதிக அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டான்.

வீட்டைவிட்டு வெளியில் போனால், பலநாட்கள்வரை எங்காவது சுற்றித் திரிந்து விட்டு பின்னர் வீட்டுக்கு வருவதை வழக்கமாகி கொண்டான். நொய்டாவில் இருக்கும் ஒரு பிரபல பள்ளியில் இந்த ஆண்டு அவனை சேர்ப்பதற்காக முயற்சித்து, நுழைவு தேர்வுக்கு அழைத்துச் சென்றேன்.

ஆனால், ஒரு கேள்விக்குகூட பதில் எழுதாமல் தேர்வுத்தாளை மடித்துதந்துவிட்டு வந்திருக்கிறான். மேலும், நான் வேலைக்கு போய்விடும் நேரத்தில் வீட்டுக்கு வந்து என்னுடைய இருமகள்களையும் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்து விட்டான்.

அவனால் என் வீட்டில் அனைவரும் நிம்மதியை தொலைத்து வாழவேண்டிய கட்டாயம் உருவானது. பலமுறை சொல்லியும் அவன் திருந்தாததால்தான் பொறுத்துப்பொறுத்துப் பார்த்த பிறகு, ‘இனி இவன் திருந்தவே மாட்டான்’ என தீர்மானித்து வீட்டைவிட்டு விரட்டினேன் என மாலினி கூறுகிறார்.

தற்போது அரசு காப்பகத்தில் தங்கியுள்ள மகேஷ், இனியாவது மனம் திருந்துவானா?, மாலினி தனது பிடிவாதத்தை தளர்த்தி அவனை வீட்டில் சேர்த்துக் கொள்வாரா? என்பது போலீசாரின் நடவடிக்கையைப் பொருத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News