செய்திகள்

கர்நாடக அணைகளில் இன்று நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு

Published On 2016-10-07 06:02 GMT   |   Update On 2016-10-07 06:03 GMT
கர்நாடகா அணைகளில் உள்ள நீர் இருப்பு பற்றி இன்றும், நாளையும் நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்கிறார்கள். ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
பெங்களூர்:

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாடு, கர்நாடகா அணைகளில் உள்ள நீர் இருப்பை நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது.

அதன் பேரில் மத்திய நீர் வளத்துறை செயலாளர் ஜா தலைமையில் நிபுணர்கள் கொண்ட தொழில் நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை காவிரி உயர் தொழில் நுட்பக் குழுவில் உள்ள நிபுணர்கள் பெங்களூரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். சுமார் 1 மணி நேரம் இந்த ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

அப்போது தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களுக்கு தற்போது தேவைப்படும் காவிரி நீர் அளவு பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடக மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் புள்ளி விவரங்களுடன் தங்கள் தண்ணீர் தேவை குறித்து கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து நிபுணர் குழுவினர் கர்நாடகா அணைகளில் முதலில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர். இன்றும், நாளையும் இரு நாட்கள் அணைகளில் உள்ள நீர் இருப்பு பற்றி நிபுணர்கள் நேரில் பார்த்து அறிவார்கள்.

கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளை நிபுணர்கள் நேரில் பார்த்து கணக்கிடுவார்கள். மேட்டூர் அனையில் உள்ள நீர் இருப்பையும் அவர்கள் கணக்கிட திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடக மாநில அரசு பெங்களூர், மைசூர் மற்றும் சுமார் 600 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை காவிரி அணைகளில் உள்ள தண்ணீரையே நம்பி இருப்பதாக கூறியுள்ளது. எனவே மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் காவிரி நதிப்படுகையில் உள்ள பகுதிகளில் குடிநீர் தேவையை ஆராய உள்ளனர்.

தென்மேற்கு பருவமழை போதிய அளவுக்கு கை கொடுக்காததால் காவிரி பாசனப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதம் குறித்தும் நிபுணர்கள் கணக்கெடுக்க உள்ளனர். நாளை இந்த பணிகள் முடிவடையும்.

கர்நாடகா அணைகள் ஆய்வுப்பணி முடிந்ததும் நிபுணர்கள் மேட்டூருக்கு வந்து தண்ணீர் இருப்பை ஆய்வு செய்வார்கள். மேலும் டெல்டா பாசனப் பகுதிகளில் உள்ள உண்மையான கள நிலவரத்தையும் கேட்டு அறிவார்கள்.

இந்த ஆய்வுகள் முடிந்ததும் நிபுணர்கள் குழு டெல்லி திரும்பும். பிறகு ஆய்வுகள் அடிப்படையில் ஜா தலைமையிலான உயர் தொழில் நுட்பக்குழு ஒரு அறிக்கையை தயார் செய்யும்.

அந்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் 18-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெறும்.

Similar News