செய்திகள்

டெல்லியில் சாதகமான தீர்ப்பு வழங்க லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி கைது

Published On 2016-09-30 06:28 GMT   |   Update On 2016-09-30 06:28 GMT
டெல்லியில் சாதகமான தீர்ப்பு வழங்க ரூ. 4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள தீங்ஹசாரி நீதிமன்றத்தின் மூத்த சிவில் நீதிபதி ரச்னா திவாரி லக்கன்பால். இவர் சொத்து பிரச்சினை தொடர்பான ஒரு வழக்கை விசாரித்தார். அந்த வழக்கில் உள்ளூர் ஆணையராக வக்கீல் விஷால் மேஹன் என்பவரை நியமித்து அதன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய நபரிடம் சாதகமாக தீர்ப்பு வழங்க நீதிபதிக்கு ரூ.20 லட்சமும், தனக்கு ரூ.2 லட்சமும் தருமாறு வக்கீல் விஷால் மேஹன் கேட்டார்.

இதுதொடர்பாக அவர் சி.பி.ஐ.யில் புகார் செய்தார். பின்னர் புகார்தாரர், வக்கீல் விஷால் மேஹனை தான் கூறிய இடத்துக்கு வரவழைத்து முதல் தவணையாக ரூ.5 லட்சம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் வக்கீல் விஷால் மேஹனை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது லஞ்ச பணத்தில் ரூ.1 லட்சம் தன்னுடைய பங்கு என்றும் ரூ4 லட்சம் பணத்தை பெண் நீதிபதி ரச்னா திவாரியிடம் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை பெண் நீதிபதியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர் நீதிபதி ரச்னா திவாரியிடம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்தார். அவர் ரூ.4 லட்சத்தை எடுத்து கொண்டு ரூ.1 லட்சத்தை வக்கீலிடம் திருப்பி கொடுத்தார். அப்போது நீதிபதியின் கணவர் அலோக் லக்கன்பாலும் அங்கு இருந்தார்.

இதையடுத்து பெண் நீதிபதி ரச்னா திவாரி, அவரது கணவர் அலோக் லக்கன்பால் ஆகியோரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.94 லட்சம் பணம் மற்றும் லஞ்ச பணம் ரூ.5 லட்சம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர்.கே கவுர் தெரிவித்துள்ளார்.

Similar News