செய்திகள்

நவிமும்பையில் பயங்கரவாதிகள் புகுந்ததாக பள்ளி மாணவர்கள் கூறிய தகவல் பொய்யானது

Published On 2016-09-29 20:32 GMT   |   Update On 2016-09-29 20:33 GMT
நவிமும்பையில் பயங்கரவாதிகள் புகுந்ததாக பள்ளி மாணவர்கள் கூறிய தகவல் பொய்யானது என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
மும்பை:

மராட்டிய மாநிலம் நவிமும்பை உரணில் சமீபத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் வெளியானது. அந்த பகுதியில் உள்ள ஆங்கிலப்பள்ளி மாணவர்கள் சிலர், ஆயுதங்களுடன் 5 பேர் நின்றதாக ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளாக இருக்கக்கூடும் என அஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து தீவிரவாதிகளின் இலக்காக இருக்கும் மும்பையில் உச்சகட்ட பாதுகாப்புகள் போடப்பட்டன. கடலோரங்களில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மராட்டியத்தின் முக்கிய நகரங்களும் தீவிர கண்காணிப்பில் இருந்தன. போலீசார், தீவிரவாத தடுப்பு படையினர், கடற்படையினர், கடலோர போலீசார், துணை ராணுவப்படையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் உரணில் உள்ள சதுப்புநிலக்காடுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் சென்று சல்லடைப் போட்டு தேடினர். 

மேலும் வீடு, வீடாக சென்றும் சோதனை நடத்தினர். வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டது. உரண் கடலோர பகுதியில் உள்ள மாங்குரோவ் காடுகளில் சென்றும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பயங்கரவாதிகள் என கருதப்படுபவர்களின் உருவப்படங்களும் வரைந்து வெளியிடப்பட்டன. ஆயினும் சந்தேகத்திற்கிடமாக யாரும் பிடிபடவில்லை. 

மேலும் பயங்கரவாதிகளை பார்த்ததாக கூறிய பள்ளி மாணவர்களும் நம்பகத்தன்மை அற்ற தகவல்களை தெரிவித்து போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நிற்பது போன்ற எந்த காட்சிகளும் பதிவாகி இருக்கவில்லை. எனவே மாணவர்கள் கூறியது பொய்யான தகவலாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து பயங்கரவாதிகளை பார்த்தாக கூறிய மாணவ, மாணவிகளிடம் போலீசார் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், 12 வயது மாணவி ஒருவள் மட்டும் பயங்கரவாதிகளை பார்த்ததாக கூறிய தனது கருத்தில் உறுதியாக இருந்தாள்.

இதையடுத்து போலீசார் அவளிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில், பயங்கரவாதிகளை பார்த்ததாக அவள் கூறியது பொய் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவள் பீதியை கிளப்புவதற்கு இவ்வாறு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் தற்கொலைப்படை பயங்கரவாதிகளால் காஷ்மீர் உரி ராணுவ முகாமில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை செய்தியை டி.வி.யில் பார்த்து இருக்கிறாள்.
இதையடுத்து அந்த மாணவி பயங்கரவாதிகளை பார்த்ததாக மற்ற மாணவ, மாணவிகள் துணையுடன் வதந்தியை கிளப்பி இருக்கிறாள். போலீசார் இதுபோன்று புரளியை கிளப்பக் கூடாது என்று அவளை கண்டித்துள்ளனர்.

Similar News