செய்திகள்

கேரளாவில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தூதராக மோகன்லால் நியமனம்: பினராயி விஜயன் அறிவிப்பு

Published On 2016-09-28 11:31 GMT   |   Update On 2016-09-28 11:31 GMT
கேரளாவில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தூதராக மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் இறந்த பின்னும் பலரை வாழ வைக்க முடியும் என்பதால் உயிர் காக்கும் உடல் உறுப்பு தானம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு மிருத சஞ்சீவினி என்ற திட்டத்தை கேரள அரசு அறிவித்தது. ‘கேரள நெட்வொர்க் பார் ஆர்கன் சேரிங்’ என்ற தனியார் அமைப்பின் உதவியுடன் கேரள அரசின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயன் இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து உடல் உறுப்பு தான விளம்பர தூதுவராக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பினராயி விஜயன் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அதில், உடல் உறுப்பு தானம் உயிர் காக்கும் என்ற கோ‌ஷத்துடன் இந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பலரது உயிரை காக்க முடியும். இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக இதன் விளம்பர தூதுவராக நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறி உள்ளார்.

Similar News