செய்திகள்

பெங்களூரில் இன்று காலை அனைத்து கட்சியினருடன் சித்தராமையா ஆலோசனை

Published On 2016-09-28 07:11 GMT   |   Update On 2016-09-28 07:11 GMT
பெங்களூரில் இன்று காலை அனைத்து கட்சியினருடன் சித்தராமையா ஆலோசனை

பெங்களூர்:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரியில் கடந்த 20-ந் தேதி வரை கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது.

அதன் பிறகு 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இது தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கூடிய அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 21-ந் தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழத்துக்கு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் விடவில்லை.

இந்த நிலையில் தமிழகத்துக்கு இன்று முதல் 30-ந்தேதி வரை காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தர விட்டது.

இந்த உத்தரவையும் அமல்படுத்த தவறினால் 30-ந்தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் போது நீதிபதிகளின் கண்டனத்துக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த உத்தரவை அமல்படுத்துமாறு சட்ட நிபுணர்கள் சிலர் கர்நாடக அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு பற்றி விவாதிக்க கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இன்று காலை பெங்களூரில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் முதல்- மந்திரி இந்த சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தங்களின் கருத்துக்களை கூறினார்கள்.

Similar News