செய்திகள்

கணக்கில் காட்டாத பணம் பற்றி தெரிவிக்க 30-ந் தேதி நள்ளிரவு வரை அலுவலகங்கள் திறந்து இருக்கும்: வருமான வரி இலாகா

Published On 2016-09-28 03:05 GMT   |   Update On 2016-09-28 03:05 GMT
முறையற்ற வருமானம் குறித்த கணக்கை தாக்கல் செய்வதற்கு வசதியாக அனைத்து வருமான வரி அலுவலங்களும் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை செயல்படும் என வருமான வரி இலாகா சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது
புதுடெல்லி:

கணக்கில் காட்டாத வருமானம்(கருப்பு பணம்) குறித்து தானாக முன்வந்து விவரங்களைத் தாக்கல் செய்யும் முறையை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி வருமானவரி இலாகா அறிவித்தது. இத்திட்டம் செப்டம்பர் 30-ந் தேதி வரை 4 மாதம் செயல்படுத்தப்படும் என்றும் அதற்கு மேல் அவகாசம் அளிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி கணக்கில் காட்டாத வருமானம் பற்றிய தகவல்களை முறைப்படி தெரிவிப்பவர்களுக்கு, 45 சதவீத வரியும் அதனுடன் அபராதமும் விதிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 2017-ம் ஆண்டு வரை 3 தவணைகளில் பணத்தை செலுத்துவதற்கும் வாய்ப்பு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வருகிற 30-ந் தேதியுடன் கணக்கில் காட்டாத வருமானம் குறித்த தகவல்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. வருமானவரி இலாகாவின் இணைய தளத்திலும் அன்றிரவு 12 மணி வரை இது குறித்த கணக்கை தாக்கல் செய்யலாம்.

இத்திட்டத்தின்படி நேரடியாக விண்ணப்பங்கள் மூலம் முறையற்ற வருமானம் குறித்த கணக்கை தாக்கல் செய்வதற்கு வசதியாக அனைத்து வருமான வரி அலுவலங்களும் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை செயல்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை வருமான வரி இலாகா கமிஷனர்கள் செய்யவேண்டும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News