செய்திகள்

நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வர விரும்பும் மகள்

Published On 2016-09-27 15:55 GMT   |   Update On 2016-09-27 15:55 GMT
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தியை இந்தியா கொண்டு வர விரும்புவதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.
லண்டன்:

இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான நேதாஜியின் மரணம் தொடர்பாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், அவரது இறப்பில் இன்னும் மர்மம் நீடித்து வருகிறது. அவர் 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந்தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில்தான் இறந்தார் என இங்கிலாந்து இணையதளம் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தியை ஜப்பானில் இருந்து இந்தியா கொண்டு வர விரும்புவதாக அவரது மகள் டாக்டர் அனிதா போஸ் பாப் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி குடியுரிமை பெற்றவரான நேதாஜி மகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அவரது (நேதாஜி) சாம்பலை இந்தியாவிற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்தியா இப்பொழுது சுதந்திர நாடு. இந்தியாவின் சுதந்திரம் என்பது அவரது தீவிர விருப்பம். சுதந்திரப் போராட்ட வீரரின் மரணம் இறுதியில் அமைதியை அடைய முடியும்.

பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் போஸ்பைல்ஸ்.இன்போ என்ற இணையத்தளத்தில் நேதாஜி மரணம் குறித்த 1956-ம் ஆண்டு விசாரணை அறிக்கை கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த ஆவணம் 1945, ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேயில் நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என்பதை உறுதி செய்கிறது. புதிய ஆவணம் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்தார்.

நேதாஜியின் அஸ்தி கடந்த 71 ஆண்டுகளாக ஜப்பான் தலைநகரில் உள்ள ரென்கோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News