செய்திகள்

ஜெயலலிதா விரைவில் குணமடைய கேரள கவர்னர் சதாசிவம் வாழ்த்து

Published On 2016-09-25 09:53 GMT   |   Update On 2016-09-25 09:53 GMT
இந்திய சுப்ரீம் கோர்ட்டின் 70-வது தலைமை நீதிபதியாக பதவிவகித்து, ஓய்வுபெற்று கேரள கவர்னராக பொறுப்புவகித்து வரும் நீதியரசர் பி.சதாசிவம், உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு இருந்ததால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். இதில் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சலும் குணப்படுத்தப்பட்டது.

இதனால் அவர் வழக்கம் போல் சாப்பிட தொடங்கினார். ஆனாலும் ஜெயலலிதாவின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்காக அவர் ஆஸ்பத்திரியிலேயே 4 நாட்களாக தங்கி இருக்கிறார்.

இந்நிலையில், இந்திய சுப்ரீம் கோர்ட்டின் 70-வது தலைமை நீதிபதியாக பதவிவகித்து, ஓய்வுபெற்று கேரள கவர்னராக பொறுப்புவகித்து வரும் நீதியரசர் பி.சதாசிவம், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நீங்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

விரைவாக பூரண குணமடைந்து, இயல்புநிலைக்கு திரும்பி, தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். கேரள முதல் மந்திரி பினராயி விஜயனும் ஜெயலலிதா நலமடைய வேண்டி நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தது, நினைவிருக்கலாம்.

Similar News