செய்திகள்

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் பெறும் திட்டம்: முக்கிய நகரங்களில் விரைவில் அறிமுகம்

Published On 2016-09-25 04:49 GMT   |   Update On 2016-09-25 04:49 GMT
தபால் அலுவலகங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த வெளியுறவு அமைச்சகத்துறை முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லி:

டெல்லி தலைநகரில் 5 பாஸ்போர்ட் சேவை மையம் இருந்தபோதிலும் விரைவாக பாஸ்போர்ட் வழங்க முடியவில்லை.

ஆன்லைனில் விண்ணப்பித்து 3, 4 மாதங்கள் கழித்துதான் நேர்காணலுக்கு அழைக்கப்படும் நிலை உள்ளது. அங்கு தினசரி 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை வருவதாலும் போதிய அளவு ஊழியர்கள் இல்லாததாலும் பாஸ்போர்ட் பெறுவதில் காலதாமதம் நீடித்து வருகிறது.

இதனால் தபால் அலுவலகங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த வெளியுறவு அமைச்சகத்துறை முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்மூலம் பாஸ்போர்ட்டுக்கு புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு விரைவாக வழங்க முடியும் என்று கருதப்படுகிறது.

தபால்துறை இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. டெல்லியில் உள்ள முக்கிய தபால் நிலையங்களில் இந்த திட்டத்தை ஆண்டு இறுதிக்குள் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் வழங்குவதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஏ, பி, சி என்ற 3 வகையில் விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரிசெய்தல், புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏ, பகுதியில் நடைபெறும் பணிகளை டாடா கன்சல்டன்சி நிறுவனம் சார்பில் அதன் ஊழியர்கள் கையாள்கிறார்கள். பி, மற்றும் சி வகையை சேர்ந்த பணிகளில் மட்டும் வெளியுறவு அமைச்சகத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பி மற்றும் சி அளவில் நடைபெறும் பணிகள் மட்டும் தபால் துறை ஊழியர்களிடம் கொடுக்கப்பட உள்ளது. இதற்காக தபால் துறை ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் ஒரு தபால் அலுவலகத்தில் 150 முதல் 200 விண்ணப்பங்கள் வரை பரிசீலிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News