செய்திகள்

இந்தியாவில் பெண்கள் வேலை செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியல்: தமிழகத்துக்கு 9-வது இடம்

Published On 2016-09-21 08:55 GMT   |   Update On 2016-09-21 08:55 GMT
இந்தியாவில் பெண்கள் வேலை செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 9-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றும் நாதன் அசோசியேட்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் பெண்கள் வேலை செய்வதற்கு ஏற்ற மாநிலம் எது? என ஆய்வொன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி பெண்கள் வேலை செய்வதற்கு ஏற்ற மாநிலங்களில் சிக்கிம் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பட்டியலில் 2-வது இடத்தை தெலுங்கானா மாநிலமும், 3-வது இடத்தை புதுச்சேரி மாநிலமும் பிடித்துள்ளன. தமிழ்நாடு 9-வது இடத்தையும், தலைநகர் டெல்லி கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

பெண்கள் வேலை செய்வதற்கு நேரக்கட்டுப்பாடு இல்லாமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு போன்ற காரணங்களால் சிக்கிம் மாநிலம் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரம் யூனியன் பிரதேசங்கள் மற்றும் வட இந்தியாவின் ஒன்பது மாநிலங்கள் இரவு நேரங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதி வழங்குவதில்லை என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Similar News