செய்திகள்

சிறப்பு மாநில அந்தஸ்துக்கு நிகராக ஆந்திராவுக்கு சிறப்பு நிதியுதவி: அருண் ஜெட்லி

Published On 2016-09-08 07:27 GMT   |   Update On 2016-09-08 07:27 GMT
ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தெலுங்கானா பகுதி தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திரப்பிரதேசம் பொருளாதார ரீதியில் சிக்கல்களை சந்தித்து வருகின்றது. அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ஆந்திர மாநிலம் தெலுங்கானவில் பிரிக்கப்பட்டதிலிருந்து பல பொருளாதார சிக்கல்களையும், வருவாய் இழப்பையும் சந்தித்து வருகின்றது. அம்மாநில அரசால் தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதனால், ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்திற்கான நிதியுதவியும், அம்மாநிலத்திற்கு ஏற்பட்டு வரும் வருவாய் இழப்புக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

சிறப்பு மாநில அந்தஸ்து இல்லையென்றாலும், இதற்கு நிகரான ஆதாயங்களை பெறும் வகையில் சிறப்பு நிதித்தொகுப்பு அளிக்கப்படும்.

மன்மோகன் சிங் தலைமையில் 2013-ல் அமைந்திருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு ஆந்திர மாநிலம் தொடர்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பா.ஜனதா அரசு முயற்சி செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News