செய்திகள்

டெல்லி ரெயில் நிலையத்தில் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜ.க மகளிர் போராட்டம்

Published On 2016-09-08 06:56 GMT   |   Update On 2016-09-08 06:56 GMT
டெல்லி ரெயில் நிலையத்தில் கெஜ்ரிவாலை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தள்ளு முள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:

டெல்லி ரெயில் நிலையத்தில் கெஜ்ரிவாலை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தள்ளு முள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் சகாப்திஎக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பஞ்சாப் மாநிலம் லூதியானா செல்ல திட்டமிட்டார். இதற்காக இன்று காலை புதுடெல்லி ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

அவர் வருகையையொட்டி ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது திடீர் என்று பா.ஜனதா மகளிர் அணியினர் கெஜ்ரிவால் சென்ற பிளாட்பாரத்துக்குள் நுழைந்தனர். கெஜ்ரிவாலை பின் தொடர்ந்து சென்று அவருக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பினார்கள்.

கெஜ்ரிவால் மந்திரி சபையில் உள்ள மந்திரிகள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்று கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மகளிர் அணியினர் கெஜ்ரிவாலை நோக்கி முன்னேறிச் சென்று அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கெஜ்ரிவாலையும் இடித்து தள்ளிவிட்டனர். உடனே போலீசார் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கெஜ்ரிவால் ரெயிலில் பஞ்சாப் செல்வது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. அது வெளியில் கசிந்தது எப்படி என்று போலீஸ் மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கூறுகையில், ரெயில் நிலையத்தில் கூட்டம் கூடியது திட்டமிட்ட சதி என்று பிரதமர் மோடி மீதும், பா.ஜனதா மீதும் குற்றம் சாட்டினார்.

Similar News