செய்திகள்

கேரளாவில் முன்னாள் மந்திரியின் மகள் வங்கி லாக்கரில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு

Published On 2016-09-07 05:12 GMT   |   Update On 2016-09-07 05:12 GMT
கேரளாவில் முன்னாள் மந்திரி பாபுவின் மகள் வங்கி லாக்கரில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது கலால்துறை மந்திரியாக இருந்தவர் பாபு. இவர் பதவியில் இருந்தபோது கேரள மதுபார் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு கம்யூனிஸ்டு ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் மந்திரி பாபு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புதிதாக புகார் கூறப்பட்டு உள்ளது. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் பாபு மற்றும் அவரது மகள்கள், உறவினர் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பாபுவின் பினாமிகள் பெயர்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டதும் தெரியவந்தது.

பாபுவின் மகள் ஆதிராவின் வங்கி லாக்கர்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு வங்கி லாக்கரில் இருந்து 120 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல ஆதிராவின் மேலும் சில வங்கி லாக்கர்களில் இருந்தும் நகை, பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

கணக்கில் காட்டப்படாத இந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் மூவாற்றுபுழா கோர்ட்டில் ஒப்படைத்தனர். இதற்கிடையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் பாபுவிடம் விரைவில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். பாபுவின் பினாமிகள் என்று புகார் கூறப்பட்டுள்ள மேலும் சிலரின் வங்கி கணக்குகள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News