செய்திகள்

சசிகலா புஷ்பா முன்ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை

Published On 2016-08-10 02:52 GMT   |   Update On 2016-08-10 02:52 GMT
தனது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
புதுடெல்லி:

டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் சசிகலா புஷ்பா. அவர் சமீபத்தில் தி.மு.க. எம்.பி. சிவாவை தாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான பிரச்சினையில் அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடியை சேர்ந்த பானுமதி (வயது 22) நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் பானுமதி, தானும் தனது அக்கா ஜான்சிராணியும் தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது சசிகலாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் தங்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாகவும் கூறி உள்ளார். மேலும் இதற்கு சசிகலா புஷ்பா மற்றும் அவரது தாயார் உடந்தையாக இருந்ததாகவும் அந்த புகார் மனுவில் பானுமதி தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி பதர் துரேஜ் அகமதிடம் சசிகலா புஷ்பாவின் வக்கீல் அபினவ் ராவ் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

அப்போது தனது கட்சிக்காரர் சசிகலா புஷ்பா மற்றும் கணவர், மகன் ஆகியோர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே அதில் அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கான மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த மனு மீதான விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு சசிகலா புஷ்பா தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.

அதன்படி சசிகலா புஷ்பா மற்றும் அவருடைய கணவர், மகன் தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி முக்தா குப்தா முன்னிலையில் நடக்கிறது.

Similar News