செய்திகள்

பிரதமர் அலுவலகத்தில் அதிக சம்பளம் பெறும் அதிகாரி யார்?

Published On 2016-08-08 13:50 GMT   |   Update On 2016-08-08 13:50 GMT
பிரதமர் அலுவலகத்தில் அதிக சம்பளம் பெறும் அதிகாரிகள் யார்? என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
புதுடெல்லி:

பிரதமர் அலுவலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பற்றிய விவரங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் பிரதமருக்கு செயலாளராக திகழும் பாஸ்கர் குல்பே ரூ.2.01 லட்சங்களை சம்பளமாகப் பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

பிரதமரின் முதன்மை செயலாளர் நிர்பேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா ஆகிய மூவரும் பாஸ்கர் குல்பேவுக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

இவர்கள் மூவரும் 1,62,500 ரூபாயை சம்பளமாகப் பெறுகின்றனர். முன்னாள் அதிகாரிகளான இவர்களுக்கு இந்த சம்பளம் தவிர பென்ஷன் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

பிரதமர் அலுவலகத்தின் ஆறு இணைச் செயலாளர்களான தருண் பஜாஜ், வினய் மோகன் க்வத்ரா, டிவி சோமநாதன், ஏகே ஷர்மா, அனுராக் ஜெயின் மற்றும் தேபஸ்ரீ முகர்ஜி ஆகியோர் 3-வது இடத்தில் உள்ளனர்.

இவர்களின் சம்பளம் 1.55 லட்சம் முதல் 1.77 லட்சம் வரையில் உள்ளது. பிரதமரின் தனிச்செயலாளர்கள் ராஜீவ் டோப்னோ, சஞ்சீவ் சிங்லா இருவரும் முறையே 1.46 மற்றும் 1.38 லட்சங்களை சம்பளமாகப் பெறுகின்றனர்.

பிரதமர் அலுவலக வலைத்தள தகவலின்படி தகவல் அதிகாரி சரத் சந்தர் 1.26 லட்சமும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜே.எம்.தக்கார் 99,000 ரூபாயையும் ஊதியமாகப் பெறுகின்றனர்.

பிரதமரின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் ஆர்.பவ்சர் உட்பட 5 பேர் ரூ.1.1 லட்சங்களை சம்பளமாகப் பெறுகின்றனர்.

Similar News