உள்ளூர் செய்திகள்

பெண் ஊழியருக்கு நலவாரிய அட்டையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

தமிழகத்திலே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வல்லம் பேரூராட்சி முதலிடம்- கலெக்டர் பேச்சு

Published On 2022-07-30 10:51 GMT   |   Update On 2022-07-30 10:51 GMT
  • வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை சரியான முறையில் பராமரிக்கின்றனர்.
  • பசுக்கள் வளர்க்கப்பட்டு, அவற்றின் சாணம் உரம் தயாரிப்புக்கு பயன்படுகிறது.

வல்லம்:

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் வல்லம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமாக தயார் செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டார். பின்னர், அரசு பள்ளி‌ மாணவ-மாணவிகளின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாணவ-மாணவிகள் சுற்றுப்புற மேம்பாடு குறித்து கவிதை வாசித்தனர்.

பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-

வல்லம் பேரூராட்சியில் தினமும் 4 முதல் 5 டன் குப்பைகள் சேர்கின்றன. வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை சரியான முறையில் பராமரிக்கின்றனர். இங்கு தோட்டம் அமைக்கப்பட்டு இயற்கை முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. மேலும், பசுக்கள் வளர்க்கப்பட்டு, அவற்றின் சாணம் உரம் தயாரிப்புக்கு பயன்படுகிறது.

வல்லம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மாவட்டத்திற்கு மட்டுமல்ல மாநிலத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள‌ மரக்கன்றுகளை அவர்களுடைய பெயர்களை சூட்டியே வளர்க்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சிறந்த மாவட்டமாக உருவாகும் என்றும், மாநிலத்திலேயே பெரிய விருட்சவனம் திருமலைசமுத்திரத்திலும், இசைவனம் திருவையாறிலும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து, பள்ளி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து 380 மரக்கன்றுகளை நட்டும், மகளிர் சுய உதவி குழுவிற்கு 4 லட்ச நிதி உதவி வழங்கியும், பேரூராட்சி பணியாளர்களுக்கு நல வாரிய அட்டையினையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். இதில் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், தஞ்சை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் அருளானந்தசாமி, வல்லம் தி.மு.க. நகர செயலாளர் கல்யாணசுந்தரம், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், வல்லம் அரசு பள்ளி ஆசிரியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பலர் உடன் இருந்தனர். ஏற்பாடுகளை பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், தனபால் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News