உள்ளூர் செய்திகள்

தேரோட்டம் நடந்த போது எடுத்தபடம்.

அம்பை அருகே வாகைபதி நாராயணசாமி கோவிலில் தேரோட்டம்

Published On 2022-09-13 08:58 GMT   |   Update On 2022-09-13 08:58 GMT
  • அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது.

வி.கே.புரம்:

அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் அய்யா தண்டில் வாகனம், கருட வாகனம், உள்ளிட்ட 11 வாகனங்களில் வீதி உலா வந்து மக்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8 மற்றும் 10-ம் திருவிழாக்களில் பால்குடம் எடுத்தல், சந்தன குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஆரம்பித்த நாள் முதல் தினமும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மம் மற்றும் இரவு 8 மணிக்கு மேல் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா ஸ்ரீ மன் நாராயணசாமி எழுந்தருளி கோவிலை பவனி வந்தார். இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நிகழ்ச்சியில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை, சிங்காரி மற்றும் நையாண்டி மேளத்துடன் சிறப்பு வானவேடிக்கையும், சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது. இரவு 11 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை வாகைபதி அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News