உள்ளூர் செய்திகள்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு விவசாயிகள் மோதிக்கொண்டதால் பரபரப்பு

Published On 2022-09-30 09:39 GMT   |   Update On 2022-09-30 09:39 GMT
  • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் முன்பு விவசாயிகள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • நெல்லுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய், வாழைக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அதேநேரம் திருச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மையங்களில் யூரியா, பொட்டாசியம் மற்றும் உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்காததாலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து இன்றைய தினம் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் உரசாக்குகளை கையில் ஏந்தியபடியும், அழுகிய வாழை மரங்களை கையில் வைத்துக் கொண்டும் தமிழக அரசை மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

மேலும் நெல்லுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய், வாழைக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், கரும்பு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்க வேண்டும், 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற உணவுத்துறை அமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் இதனை மாற்றி 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அய்யாக்கண்ணு உரையாற்றியபோது,

பெண் விவசாயி கௌசல்யா மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும்அய்யாக்கண்ணு நீண்ட நேரம் உரையாற்றுகிறார் எனவும் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விவசாயிகளுக்குள் வாக்குவாதம் மோதலாக உருவெடுத்தது. இதை அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர். அதிகாரிகள் முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News