உள்ளூர் செய்திகள்

குடிநீர் இணைப்புக்கு பணம் வசூல் செய்வதாக மாநகராட்சி கூட்டத்தில் புகார்

Published On 2022-06-29 09:29 GMT   |   Update On 2022-06-29 09:29 GMT
  • திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
  • சுயேட்சை கவுன்சிலர் பேசுகையில், குடிநீர் பைப் பதிக்கும் பணிக்கு சிலர் முறைகேடாக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்கிறார்கள். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திருச்சி:

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் ஆணையாளர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி 19-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சாதிக் பேசும்போது, வர்த்தக நிறுவனங்கள் நிரம்ப இருக்கும் மேல புலிவார்டு சாலையில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பைப்லைன் முழுவதுமாக பதிக்கப்பட்டு விட்டது.

எப்போது துண்டிக்கப்பட்ட சாலை சீரமைக்கப்படும் என கேள்வி எழுப்பினார். அதற்கு மாநகராட்சி அதிகாரி பாலு இன்று அல்லது நாளை அந்த சாலை சீரமைக்கப்படும் என பதிலளித்தார்.

மேலும் இந்தக் கூட்டத்தில் கருமண்டபம் மாந்தோப்பு, புதுத்தெரு, தெற்கு தெரு பகுதியில் ராணுவ நிலத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கிடைக்க தீர்மானம் முன் வைக்கப்பட்டது.

பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 8.30 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாக வருவாய்த்துறை நிலம் ஒதுக்க மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி தி.மு.க. கவுன்சிலர் பி.ஆர்.பி.மஞ்சுளா தேவி ஏழை மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் கே.என்.நேரு, மேயர் அன்பழகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

நீண்ட காலமாக போராடி வரும் மக்களுக்கு பட்டா கிடைக்க கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சுயேட்சை கவுன்சிலர் எல்ஐசி சங்கர் பேசும்போது, மாநகராட்சி பகுதியில் இலவச குடிநீர் பைப் பதிக்கும் பணிக்கு சிலர் முறைகேடாக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்கிறார்கள்.

இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அவ்வாறு எந்த புகாரும் எனக்கு வரவில்லை. ஆதாரத்துடன் புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் அன்பழகன் பதிலளித்தார்.

சுயேட்சை கவுன்சிலரின் குற்றச்சாட்டுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News