உள்ளூர் செய்திகள்

சாதி சான்றிதழுக்காக மலைக்குறவர் பழங்குடியின மக்கள் அலைகழிப்பு - கல்வியை தொடர முடியாமல் மாணவர்கள் அவதி

Published On 2022-08-10 09:23 GMT   |   Update On 2022-08-10 09:23 GMT
  • லால்குடி அருகே திருத்தலையூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மலைக்குறவர்கள் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.
  • உடனடியாக மாணவர்களின் பெற்றோரால் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழை வாங்கி தர முடியவில்லை. இதனால் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு பலர் மாற்றாக தொழிலுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது

திருச்சி :

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருத்தலையூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மலைக்குறவர்கள் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சாதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சாதி சான்றிதழ் வாங்க அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சாதி சான்றிதழுக்காக வருடக் கணக்கில் அலைந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் பரம்பரை பரம்பரையாக மூங்கில் கூடை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். மேலும் காட்டுக்கு சென்று பன்றிகளை வேட்டையாடி விற்பனையும் செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மலைக்குறவர்களின் மூதாதையர்கள் திருச்சி மாவட்டம் பச்சமலை மற்றும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தனர். வெள்ளைக்காரர்களின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட வன சட்ட திருத்த மசோதா காரணமாக வாழ்வாதாரம் இழந்து சமவெளிப் பகுதிக்கு அவர்கள் வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இப்போது சாதி சான்றிதழ் வழங்க பல்வேறு ஆதாரங்களை கேட்பதாக குற்றம் சாட்டும் அவர்கள், இதனால் தங்களது எதிர்கால சந்ததியினரின் கல்வி பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை, கல்லூரி படிப்பை தொடர நினைக்கும் போது பள்ளிக்கூடத்தில் சாதி சான்றிதழ் கேட்பது வழக்கமான ஒன்று. ஆனால் உடனடியாக மாணவர்களின் பெற்றோரால் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழை வாங்கி தர முடியவில்லை. இதனால் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு பலர் மாற்றாக தொழிலுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி, தமிழ்நாடு மலைக்குறவன் பழங்குடியின மக்கள் நல சங்க பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், நான் பலகட்ட போராட்டத்துக்குப் பின்னர் 2001-ல் சாதி சான்றிதழ் வாங்கினேன். திருச்சி மாவட்டத்தில் இருக்கும் 500 மலை குறவர்களில் 100 பேரிடம் மட்டுமே சாதிச் சான்றிதழ் இருக்கிறது. எனவே அரசின் சலுகைகள் மற்றும் கல்வி எங்கள் மக்களுக்கு கிடைக்காமல் போகிறது. அனைவருக்கும் உடனே சாதி சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அரசு கெஜட்டில் மலைக்குறவர் ஜாதி இடம்பெறவில்லை. இதனால் சான்றிதழ் கொடுப்பதற்கு முன்பாக அந்த பெயரை பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கிறது. இதுவே காலதாமதத்திற்கு காரணம் என்றனர்.

ஆனால் மலை குறவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கெஜட்டில் மலைக்குறவன் என இருக்கிறது. இந்த எழுத்து பிழையை வைத்துக்கொண்டு அதிகாரிகள் எங்களை அலைக்கழிக்கிறார்கள். இதில் கலெக்டர் பிரதீப் குமார் தலையிட்டு சாதி சான்றிதழ் தடையின்றி தாமதம் இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News