உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை - வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

Published On 2022-07-14 09:47 GMT   |   Update On 2022-07-14 09:47 GMT
  • மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வந்து குறைபாடாக விண்ணப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிசெய்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

திருச்சி :

திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 2005 ஆம் ஆண்டு முதல் உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாத வாய்பேச இயலாதோர், பார்வையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை பெற்றிட தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல்கள், ஆதார் அட்டை, தற்போதைய புகைப்படம், கையொப்பம் (அ) கைவிரல் ரேகை ஆகியவற்றின் ஒளி நகலுடன் இ-சேவை மையங்களில் இதுவரை 47,159 நபர்கள் விண்ணப்பித்து அதில் சான்றுகள் சரியாக உள்ள 37,541 நபர்களுக்கு நேரடியாகவும், அஞ்சல் மூலமாகவும் அவரவர் முகவரிக்கு தனித்துவ அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மீதம் 896 தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பம் குறைபாடாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விண்ணப்பதாரர்கள் வருகிற ஜூலை 20-ந்தேதிக்குள் நேரடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வந்து குறைபாடாக விண்ணப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிசெய்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுநாள் வரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றிட ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறப்படாத மாற்றுத்திறனாளிகளும், புதியதாக தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளும் உடனடியாக தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டையின் கலர் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கலர்-1 ஆகிய சான்றுகளுடன் திருச்சி கண்டோன்மென்ட், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அல்லது நேரில் மாற்றுத்திறனாளிகள் வராமல் அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் ஆவணங்களுடன் வந்து பயனடையுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0431-2412590 ல் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News