உள்ளூர் செய்திகள்

விளாத்திகுளம் அருகே கோழிப்பண்ணையில் திருட்டு - சப்-இன்ஸ்பெக்டர் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

Published On 2023-09-29 08:55 GMT   |   Update On 2023-09-29 08:55 GMT
  • பால்ராஜ் தனக்கு சொந்தமான இடத்தில் வான்கோழி, நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.
  • கடந்த 22-ந் தேதி பால்ராஜ் பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த நாட்டுக்கோழிகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். (வயது48). முதுகலை பட்டதாரியான இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை அமைத்து அதில் வான்கோழி, வாத்து, நாட்டுக்கோழி மற்றும் சேவல்களை வளர்த்து வந்துள்ளார்.

கோழிப்பண்ணையில் திருட்டு

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கோழிப் பண்ணையில் இருந்த வான்கோழிகள் மற்றும் கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பால்ராஜ் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் தனக்கு சந்தேகமான நபர்கள் குறித்து புகார் கூறியுள்ளார். ஆனால் அவரின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 22-ந் தேதி பால்ராஜ் பண்ணைக்குள் மீண்டும் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வான் கோழிகள், வாத்துக்கள் மற்றும் நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் இது குறித்து மீண்டும் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது அதனை அங்கி ருந்த சப்-இன்ஸ் பெக்டர் ஒருவர் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பால்ராஜ் தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று தனது மனுவை சப்-இன்ஸ்பெக்டர் பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் புகார் அளித்தார். மேலும் தன்னுடைய கோழிப் பண்ணையில் கோழிகளை திருடியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார்.

இதற்கிடையே கோழிப்பண்ணை உரிமை யாளர் பால்ராஜ் புகார் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் டி.எஸ்.பி. ஜெயச் சந்திரனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News