உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கி பலியான மாணவர் லிதர்சன் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

Published On 2022-06-12 10:29 GMT   |   Update On 2022-06-12 10:29 GMT
  • பெரியகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இர்வீன் பாலம் அருகே கல்லணைக் கால்வாயில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர்.
  • இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மாணவன் லிதர்சனை தேடினர்.

தஞ்சாவூர்:

சென்னை போரூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் லிதர்ஷன் (வயது 21). இவரது நண்பர் முகப்பேரைச் சேர்ந்த நிதின் (21). இவர்கள் இருவரும் சென்னையிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் தஞ்சாவூரைச் சுற்றிப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர் பெரியகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இர்வீன் பாலம் அருகே கல்லணைக் கால்வாயில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் லிதர்ஷன் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ச்சி அடைந்த நண்பர் நிதின் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் லிதர்சனை காப்பாற்ற முயன்றார். ஆனால், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிதர்ஷனை காணவில்லை.

இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஆற்றில் குதித்து லிதர்சனை தேடி வந்தனர். இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மாணவன் லிதர்சனை தேடினர். அப்போது தஞ்சையை அடுத்த பொட்டுவாச்சாவடி பகுதியில் உள்ள நெய் வாய்க்காலில் லிதர்சன் உடல் பிணமாக மிதந்து சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த தீயணைப்பு வீரர்கள் லிதர்சன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் அவரது பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News