உள்ளூர் செய்திகள்

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 9 பேர் பலியான விபத்து பகுதியில் தற்காலிக தடுப்புகள் அமைப்பு

Published On 2023-10-04 08:37 GMT   |   Update On 2023-10-04 08:37 GMT
  • இந்த விபத்தை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
  • சாலையோரங்களில் இருபுறமும் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

ஊட்டி,

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த 60 பேர் கடந்த 30-ந் தேதி தனியார் பஸ் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் தடுப்புச்சுவரில் மோதி 50 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்தை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர். விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் விபத்து நடந்த பகுதியில் தற்காலிகமாக நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யவேண்டும். விபத்து நிகழாத வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். சாலையோரங்களில் இருபுறமும் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News