உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை- முதலமைச்சரின் விளக்கத்தால் அதிமுகவினர் சட்டசபையில் அமளி

Published On 2023-03-23 05:11 GMT   |   Update On 2023-03-23 05:11 GMT
  • காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
  • கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

சென்னை:

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அன்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3-ம் நாள் நிகழ்வு இன்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு, பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

பின்னர், காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

இதற்கிடையே கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது, பட்டப்பகலில் கொடூரமாக கொலை நடந்துள்ளது. இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆணவக்கொலையில் சம்மந்தப்பட்டவர் அவதானப்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் என்பது தெரிய வந்துள்ளது. சமூக நீதி காக்கும் மண்ணாக உள்ள தமிழ்நாட்டில், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

கொலை செய்த பெண்ணின் தந்தையை அதிமுக கிளை செயலாளர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதால் சட்டசபையில் அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News