உள்ளூர் செய்திகள்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அரசு ஊழியர் சங்கம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும்- மாநில துணை பொது செயலாளர்

Published On 2022-12-04 11:45 GMT   |   Update On 2022-12-04 11:45 GMT
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 
  • தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வில்லை.

காஞ்சிபுரம்:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் வருவாய் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் மாவட்ட தலைவர் வெ.லெனின் தலைமையில் நடைபெற்றது.

ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த பேரவை கூட்டத்தில் மாநில செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் வேலை அறிக்கை, விவாதம், தீர்மானங்கள் முன்மொழிதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. முக்கிய கோரிக்கைகளாக, மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும். 

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும். அரசு துறைகளை தனியார் மயமாக்கும் அரசாணை எண் 115-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கொள்கைகள் வாசிக்கப்பட்டது.

அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்தம், புற ஆதார முகமை முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் சிறப்பு கால முறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தப் படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வாசிக்கப்பட்டது.

பின்னர் மாநில துணைப் பொதுச் செயலாளர் தெ.வாசுகி அளித்த பேட்டியில், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வில்லை. சேலத்தில் 17-ந் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு முன்னதாக மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Similar News