உள்ளூர் செய்திகள்

புளியங்குடியில் மொபட் மீது கார் மோதி விவசாயி-இளம்பெண் பலி

Update: 2022-07-03 05:47 GMT
  • தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் அன்புசெல்வன் (வயது 48), விவசாயி.
  • காரில் சிக்கிய மொபட் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் அன்புசெல்வன் (வயது 48), விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் சிந்தாமணி பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி கலா (35) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை தோட்ட வேலைக்காக அன்புசெல்வன் மொபட்டில் கலாவை அழைத்து சென்றார். அவர்கள் புளியங்குடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கும்பகோணத்தில் இருந்து குற்றாலம் நோக்கி ஒரு கார் வந்தது. காரை சாதிக் மைதீன் என்பவர் ஓட்டி வந்தார்.

அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது மொபட்டும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அன்புசெல்வன், கலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரில் சிக்கிய மொபட் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. பின்னர் அது உராய்வின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் டிரைவர் சாதிக் மைதீனுக்கு காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் புளியங்குடி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த சாதிக் மைதீனை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் பலியான அன்புசெல்வன், கலா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News