உள்ளூர் செய்திகள்

கோவையில் இன்று 81 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்

Published On 2023-03-05 05:33 GMT   |   Update On 2023-03-05 08:25 GMT
  • கோவை-அவினாசி சாலையில் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் மஹாலில் தி.மு.க சார்பில் 81 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.

கோவை:

தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் நேற்று இரவு கரூரில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வருகை தந்தார். அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.கவினர் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இரவு தங்கி ஓய்வெடுத்தார்.

இன்று காலை 10 மணிக்கு கோவை-அவினாசி சாலையில் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் மஹாலில் தி.மு.க சார்பில் 81 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

தொடர்ந்து மணமக்களுக்கு பட்டு புடவை, பட்டு வேஷ்டி, கட்டில், மெத்தை, பிரிட்ஜ், டிவி, 2 குத்துவிளக்கு, ஹாட்பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர், சில்வர் குடம், சில்வர் பாத்திரம், தாம்பூழம், பீரோ உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 70 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.பி. நாகராஜ், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மற்றும் செந்தில் கார்த்திகேயன், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் ஆரோக்கிய ஜான், சிங்கை ரவிச்சந்திரன், கோட்டை அப்பாஸ், இைளஞரணி பாலாஜி விக்னேஷ், வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் கொடிசியா அருகே ரேக்ளா போட்டியை தொடங்கி வைத்து போட்டியை கண்டு ரசித்தார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

தொடர்ந்து கோவை வ.உ.சி. மைதானத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அங்கு தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் சாரஸ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் கிராந்திகுமார் பாடி, அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 5.30 மணிக்கு கொடிசியா மைதானத்தில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தி.மு.கவின் மூத்த முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி, தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News