உள்ளூர் செய்திகள்

தவறு செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும்- அமைச்சர் பெரியசாமி

Published On 2022-07-01 09:31 GMT   |   Update On 2022-07-01 10:58 GMT
  • கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதனை கண்டுபிடிக்க மூத்த வக்கீல்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை மோசடிகள் குறித்து பல வழக்குகள் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வக்கம்பட்டியில் கூட்டுறவு கல்லூரியை இன்று அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் 33 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திலேயே முதன் முறையாக ஆத்தூரில் கூட்டுறவுத்துறைக்கென கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள கூட்டுறவு கல்லூரி மூலம் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதே போல் கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள இடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதனை கண்டுபிடிக்க மூத்த வக்கீல்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை மோசடிகள் குறித்து பல வழக்குகள் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.

அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.300 கோடி மோசடி சொத்துக்களாவது பறிமுதல் செய்து ஏலம் விடப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள் எந்தவித தவறும் நடக்காதவாறு வெளிப்படை தன்மையுடன் நடைபெறும். தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும்.

கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News