உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அனல்மின் நிலைய டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-09-08 07:31 GMT   |   Update On 2022-09-08 07:31 GMT
  • டெண்டர் நடவடிக்கைகளால் அரசுக்கு எப்படி இழப்பு ஏற்படும் என்பதை மனுதாரர் விளக்கவில்லை.
  • டெண்டர் நிபந்தனைகளை பொறுத்தவரை அது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது.

சென்னை:

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி மேட்டூர் நகராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தங்கப்பன் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் மேற்கொள்ளப்படும் 36 வகையான பணிகளுக்கு தனித்தனியாக நான்கு மாதங்களுக்கு டெண்டர்கள் வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது.

இந்த நடைமுறையை மாற்றி ஐந்து ஆண்டுகளுக்கு சேர்த்து அனைத்து பணிகளையும் ஒரே ஒப்பந்ததாரரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

டெண்டர் கோரும் முன் அதற்கான மதிப்பீடுகள் ஏதும் செய்யப்படவில்லை என்பதால் இந்த டெண்டரை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆகியோர், மனுதாரர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறியிருப்பதாகவும், இந்த வழக்கு அரசியல் நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டனர்.

இதையடுத்து, டெண்டர் நடவடிக்கைகளால் அரசுக்கு எப்படி இழப்பு ஏற்படும் என்பதை மனுதாரர் விளக்கவில்லை. டெண்டர் நிபந்தனைகளை பொறுத்தவரை அது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது.

டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளுக்கு முரணாக டெண்டர் நிபந்தனைகள் இல்லை என்பதால், இதில் தலையிட முடியாது எனக்கூறி, வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News