உள்ளூர் செய்திகள்

சைடிஸ் தகராறில் வாடிக்கையாளர்களை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் உள்பட 8 பேர் கைது

Published On 2022-08-04 08:58 GMT   |   Update On 2022-08-04 08:58 GMT
  • வாடிக்கையாளர்கள் 2 பேரிடமும் ஓட்டல் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தது.
  • அதற்கு பின்னர் நடந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அழிக்கப்பட்டு இருந்தது.

நெல்லை:

நெல்லை தெற்குபுறவழிச்சாலையில் தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது.

இந்த ஓட்டலில் நேற்று இரவு தச்சநல்லூர் ஊருடையார்புரம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள்(வயது 23), கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ. நகர் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(22) மற்றும் அவர்களது நண்பர் சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் சாப்பிட வந்துள்ளனர்.

அப்போது ஓட்டல் ஊழியரிடம் தந்தூரி சிக்கனுக்கு சைடிஸ் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர் காலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அதற்கான தொகையை குறைத்து கொள்ளுமாறு 3 பேரும் கூறி உள்ளனர்.

இதுசம்பந்தமாக அவர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமாள் உள்ளிட்ட 3 பேரையும் தாக்கி உள்ளனர்.

இதில் சதீஷ்குமார் அங்கிருந்து வெளியே ஓடிவந்துவிட்டார். இந்த தாக்குதலில் சிவபெருமாள், மணிகண்டன் ஆகியோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் போலீசார் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் அங்கு வந்து விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து, ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் வாடிக்கையாளர்கள் 2 பேரிடமும் ஓட்டல் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தது. அதற்கு பின்னர் நடந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அழிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே தாக்குதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓட்டல் உரிமையாளர் செய்யது பஷீர்(வயது 32), கணக்காளர் முகமது யூசுப்(28), சமையல் மாஸ்டர் சிராஜூதின் சேக்(38), முகமது தாகீர்(26), சப்ளையர் ரமீஸ் ராஜா(32), சதாம் உசேன் பாதுஷா(32), ஜாகீர் உசேன்(53), சரவணன் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் மேற்கொண்டு எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க இன்றும் ஓட்டல் முன்பு, மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News