உள்ளூர் செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட 26 பேர் கைது

Published On 2022-12-27 09:28 GMT   |   Update On 2022-12-27 09:28 GMT
  • அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருவதாக கூறியும், திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
  • கலெக்டர் வினீத், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருப்பூர்:

திருப்பூர் மண்ணரையை சேர்ந்தவர் அருண் அந்தோணி. கிறிஸ்தவ மதபோதகர். இவர் அந்த பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி அதில் திருச்சபை கட்ட சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த சிலர் கட்டுமான பணியை நிறுத்தியதுடன் அருகில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்தனர்.

1½ ஆண்டுகளாக இதுவரை கட்டுமான பணி தொடங்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு திருச்சபை கட்ட உரிய அனுமதி வழங்குமாறும் கூறி அருண் அந்தோணி தலைமையில் கிறிஸ்தவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி காலை முதல் விடிய, விடிய தர்ணாவில் ஈடுபட்டனர். 2-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் முடிவு தெரிவிப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறி நேற்று காலை அருண் அந்தோணி தலைமையில் கிறிஸ்தவ மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவை தொடங்கினார்கள்.

அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருவதாக கூறியும், திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்னர் கலெக்டர் வினீத், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 2 வாரத்துக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தங்களுக்கு இனிமேலும் காலம் கடத்தாமல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி தர்ணாவை நேற்று இரவு 9 மணிக்கு மேலும் தொடர்ந்தனர். குழந்தைகளுடன் போராட்டம் நடத்தியதால் வீரபாண்டி போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News