தமிழ்நாடு

காங். தலைவர் கொலையில் முக்கிய தடயம் சிக்கியது: இறுதிகட்ட விசாரணையில் போலீஸ் தீவிரம்

Published On 2024-05-12 07:45 GMT   |   Update On 2024-05-12 07:45 GMT
  • கடந்த 2-ந்தேதி இரவு ஜெயக்குமார் மாயமாவதற்கு முன்பாக கடைசி 2 மணி நேரம் பயணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • 2-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் தோப்புவிளைக்கு நேரடியாக செல்லவில்லை.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மச்சாவு வழக்கில் ஒரு வாரத்தை கடந்த பின்னும் இதுவரை உறுதியான முடிவுக்கு வர முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் நிலையில், அவர் உடல் எரிக்கப்பட்டு கிடந்த தோட்டத்தில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு ஏதேனும் தடயங்கள் சிக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நேற்றும் 5-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஜெயக்குமார் பிணமாக கிடந்த குழியில் மீண்டும் ஆய்வு செய்தபோது அதில் எரிந்த நிலையில் டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த 2-ந்தேதி அன்று இரவில் அவர் மாயம் ஆவதற்கு முன்பாக திசையன்விளை பஜாரில் ஒரு டார்ச் லைட் வாங்கினார். அவை அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் அவரது குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அந்த டார்ச் லைட் அவர் திசையன்விளையில் வாங்கியது தானா? என்பதை அறிய கடை உரிமையாளரிடம் அந்த லைட்டை கொண்டு சென்று தனிப்படையினர் இன்று விசாரிக்கின்றனர். அதில் ஏதேனும் கைரேகைகள் உள்ளதா? என கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

தோட்டத்தில் தேக்கு மரங்கள் அதிகமாக இருப்பதால் அதில் இருந்து விழுந்துள்ள காய்ந்த இலை சறுகுகளை அப்புறப்படுத்தி வேறு ஏதேனும் தடயங்கள் சிக்குகிறதா எனவும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்படுகிறது.

ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட தடயங்கள் அனைத்தும் அவரது வீடு மற்றும் தோட்ட பகுதிகளிலேயே சிக்கி வருவதால் இன்னும் சில தினங்களில் வழக்கு முடிவுக்கு வந்துவிடும் எனவும், தற்போது இறுதிகட்ட தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2-ந்தேதி இரவு அவர் மாயமாவதற்கு முன்பாக கடைசி 2 மணி நேரம் பயணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்று இரவு உவரியை அடுத்த குட்டம் அருகே உள்ள தோப்புவிளை பகுதியில் ஜெயக்குமாரின் செல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆனதாக ஏற்கனவே போலீசார் தெரிவித்தனர். அவரது சொந்த ஊரான கரைசுத்து புதூரில் இருந்து தோப்புவிளை மொத்தம் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

ஜெயக்குமார் அரசியில் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் யாரையும் சந்திக்க வேண்டும் என்றால் இந்த பாதையில் தான் வழக்கமாக குட்டம், தோப்புவிளை கிராமங்களுக்கு செல்வார். ஆனால் 2-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் தோப்புவிளைக்கு நேரடியாக செல்லவில்லை. அதற்கு பதிலாக வேறு ஒரு சுற்றுப்பாதையை பயன்படுத்தி சென்றுள்ளார். அவர் கரைசுத்துபுதூரில் இருந்து காரில் 7.30 மணிக்கு புறப்பட்டு திசையன்விளை, மன்னார்புரம், அணைக்கரை, பெருங்குளம், உறுமன்குளம், பெட்டைக்குளம், அணைக்குடி, குட்டம் வழியாக சுமார் 43 கிலோமீட்டர் சுற்றி சென்று தோப்புவிளையை அடைந்துள்ளார்.

அவர் மன்னார்புரம் விலக்கில் உள்ள பெட்ரோல் பங்கில் இரவு 8 மணிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு அதன் பின்னர் வேறு எங்கும் தனது காரை நிறுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் ஜெயக்குமாரின் காரில் வேறு யாரும் பயணம் செய்யவில்லை என்றும் அந்த பங்க் ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனியாக தோப்புவிளை சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த இரவு நேரத்தில் அதுவும் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய காட்டு வழிப்பாதையில் 43 கிலோமீட்டர் சுற்றி அவர் பயணம் மேற்கொண்டது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவரது அந்த கடைசி 2 மணி நேர பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News