உள்ளூர் செய்திகள்

அசோக்நகர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 என்ஜினீயர்கள் பலி

Update: 2022-12-05 11:08 GMT
  • ஜெய சூர்யா, பிரேம்குமார் இருவருக்கும் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது26). சென்னையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் சர்வீஸ் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 28) சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் மணப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நண்பர்களான இருவரும் சென்னை பரங்கிமலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் நண்பர்கள் இருவரும் வெளியே சென்றுவிட்டு நள்ளிரவு 12.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஜெயசூர்யா மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.

அசோக்நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் அருகே 100 அடி சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் வேகமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ஜெய சூர்யா, பிரேம்குமார் இருவருக்கும் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜெயசூர்யா பையில் மது பாட்டில்கள் வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மது அருந்திவிட்டு போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதா? என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News