உள்ளூர் செய்திகள்

புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2023-04-08 09:39 GMT   |   Update On 2023-04-08 09:39 GMT
  • சிறப்பு மன்றாட்டுக்கள், திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு நடைபெற்றது.
  • எரியும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஜெபித்து கொண்டு சென்றனர்.

தஞ்சாவூர்:

கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இயேசு சிலுவையில் உயிர் விட்ட நாளை புனித வெள்ளியாக நேற்று அனுசரிக்கப்பட்டது.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்தநாளை புனித வெள்ளியாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர்.

தவக்காலத்தின் கடைசி வெள்ளியாகவும், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளியாகவும் இடம் பெறும் இந்த வெள்ளியானது உலகில் உள்ள கிறிஸ்தவர்களால் ஒரே நாளில் துக்கநாளாக அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் திரு இருதய பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு பிரார்த்தனை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நேற்றுமாலை நடந்தது.

முன்னதாக பேராலய வளாகத்தில் சிறப்பு நற்செய்தி வாசகம், மறையுரை, சிறப்பு மன்றாட்டுக்கள், திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு நடைபெற்றது.

பின்னர் இறைமக்கள் பாடுபட்ட இயேசுவின் சிலுவையை முத்தி செய்யும் சடங்கு நடைபெற்றது.

தொடர்ந்து முக்கிய நிகழ்வான சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. முடிவில் இயேசுவின் பாடுபட்ட சொரூபம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக புனித வியாகுல அன்னை ஆலயத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடந்தது.

இதில் இறைமக்கள் ஏராளமானோர் எரியும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஜெபித்து கொண்டு சென்றனர்.

மரித்த ஆண்டவர் சொரூபம் இறைமக்கள் வழிபாட்டிற்காக புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பரிபாலகர் சகாயராஜ், பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார் மற்றும் குருக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் தஞ்சையில் உள்ள அனைத்து தேவாலயங்க ளிலும் புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது.

Tags:    

Similar News