உள்ளூர் செய்திகள்

பலியான சிறுமிகள்.

செப்டிக் டேங்க் தொட்டியில் விழுந்த 2 சிறுமிகள் ஒரே மாதத்தில் 3 பேர் பலியான சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி

Published On 2022-09-30 05:16 GMT   |   Update On 2022-09-30 05:16 GMT
  • மூடி சேதமடைந்திருந்ததால் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் திடீரென உள்ளே விழுந்து மூழ்கினர்.
  • ஆனால் அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்கு முன்பே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் பாவலர்தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் நிகிதாஸ்ரீ (வயது 7). 2ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலையில் தனது மனைவியுடன் தங்கி ஏலத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் சுபஸ்ரீ (6) பண்ணைப்புரத்தில் தனது தாத்தா வீட்டில் வளர்ந்து வந்தார். இவரும் அதே பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுமிகள் 2 பேரும் அங்குள்ள மகளிர் சுகாதார வளாகம் அருகே விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அதன் அருகே அமைக்கப்பட்டு இருந்த செப்டிக் டேங்க் தொட்டி மீது ஏறினர். அந்த தொட்டியின் மூடி சேதமடைந்திருந்ததால் திடீரென இருவரும் உள்ளே விழுந்து மூழ்கினர். உடனே அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

பின்னர் அவர்களை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்கு முன்பே அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழுதடைந்த செப்டிக் டேங்க தொட்டியை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் 2 உயிர்கள் பலியாகியுள்ளது என்று தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பலியான சிறுமிகளின் உடல்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹாசினி ராணி என்ற 8 வயது சிறுமி உயிரிழந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மேலும் 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மக்களின் விலை மதிப்பில்லா உயிர் பலி போய் வருவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News